இந்த ஆண்டு 2 இடங்கள் சரிவு.. காலநிலை பாதுகாப்பில் இந்தியாவுக்கு 10-வது இடம்

  தினத்தந்தி
இந்த ஆண்டு 2 இடங்கள் சரிவு.. காலநிலை பாதுகாப்பில் இந்தியாவுக்கு 10வது இடம்

பாகு (அசர்பைஜான்):ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை மாநாடு அசர்பைஜானில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் நாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. பின்னர், காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு பட்டியல் (சிசிபிஐ) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 இடங்கள் பின்தங்கினாலும், டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை எந்த நாடும் பிடிக்கவில்லை. நான்காவது இடத்தில் டென்மார்க், ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்து, 6-வது இடத்தில் பிரிட்டன், 7-வது இடத்தில் பிலிப்பைன்ஸ், 8-வது இடத்தில் மொராக்கோ, 9-வது இடத்தில் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன. அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடுகளாக சீனா (55-வது இடம்), அமெரிக்கா (57-வது இடம்) ஆகியவை உள்ளன.பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காலநிலைக் கொள்கைகளின் அடிப்படையில் அதிக அளவு வாயுக்களை வெளியேற்றும் நாடுகளின் செயல்திறனை கண்காணித்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் 90 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வை கொண்டுள்ள 63 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.இந்த ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா 10-வது இடத்திற்கு பின்தங்கினாலும், அதிக செயல்திறன் கொண்ட நாடுகளில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், இந்தியாவின் காலநிலை கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சாத்தியமில்லை என சிசிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தொழில்துறையின் எரிசக்தி தேவை மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை அதிகரிப்பால், காலநிலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான வளர்ச்சி சார்ந்த அணுகுமுறை தொடரும் அல்லது தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிசிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், தனிநபர் உமிழ்வு மற்றும் ஆற்றல் பயன்பாடு என்பது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் வேகமாக விரிவடைந்துள்ள. மேலும் உலக அரங்கில் பசுமை ஆற்றலில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் சிசிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை