புதிய நாடாளுமன்ற கூட்டம்: கொள்கை அறிக்கையை வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி - லங்காசிறி நியூஸ்
சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க ஆரம்பித்தார். இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்தல் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து பாராளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் ஆசனத்திற்கு தலைமை தாங்கி, அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 ஆவது சரத்துக்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்தார். அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.அரசியலமைப்பின் 33(b) பிரிவின்படி, பாராளுமன்றத்தின் சம்பிரதாய கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும், அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதியே முன்வைப்பார். இந்த உரையின் மூலம் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் விரிவான கொள்கை விளக்கங்களை முன்வைத்து, அரசாங்கத்தின் எதிர்கால பார்வையை ஜனாதிபதி விரிவாக் கூறியுள்ளார்.