ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தாரிடம் தோல்வி கண்ட இந்தியா
சென்னை,ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் சவுதி அரேபியா தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய போட்டிக்கு தகுதி பெறும். 3-வது இடம் பிடிக்கும் 6 அணிகள் தங்களுக்குள் மோதி அதில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.தகுதி சுற்றில் 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு வெற்றிக் கணக்கை தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற தனது 3-வது லீக் ஆட்டத்தில் முய்ன் பெக் ஹபீஸ் தலைமையிலான இந்திய அணி, கத்தாரை எதிர்கொண்டது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 53-69 என்ற புள்ளி கணக்கில் கத்தாரிடம் கத்தாரிடம் தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இந்திய அணியில் கேப்டன் முய்ன் பெக் ஹபீஸ் 17 புள்ளியும், பிரின்ஸ் 13 புள்ளியும் எடுத்தனர். கத்தார் அணியில் லீ ஹாரிஸ், மைக் லீவிஸ் தலா 17 புள்ளிகள் சேர்த்தனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.