5 நாட்கள் சுற்றுப்பயணத்தில் உலக தலைவர்களுடன் 31 பேச்சுவார்த்தைகள் நடத்திய பிரதமர் மோடி
புதுடெல்லி,பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்று, அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கயனா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' (The Order of Excellence) விருது வழங்கப்பட்டது.தனது 5 நாட்கள் சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக ஜி-20 மாநாட்டையொட்டி பிரேசிலில் நடைபெற்ற 10 இருதரப்பு பேச்சுவார்த்தைகள், அதனை தொடர்ந்து கயானாவில் நடைபெற்ற 9 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் மோடி பங்கேற்றார். இதன்படி பிரேசிலில் இந்தோனேசியா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், இங்கிலாந்து, சிலி, அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். அதேபோல் கயானாவில், டோமினிகா, பகாமாஸ், திரினிடாட் & டோபாகோ, சுரிநாம், பார்படாஸ், அன்டிகுவா & பார்புடா, கிரெனெடா மற்றும் செயிண்ட் லூசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இது தவிர, முறைசாரா சந்திப்புகள் வாயிலாக சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்து, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றியம், உலக வர்த்தக மையம், உலக சுகாதார மையம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.