'ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும்' - மாணிக்கம் தாகூர் எம்.பி.
விருதுநகர், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளலாம், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒரு நண்பனாக மட்டுமே இருக்க முடியும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு, மாநிலத்தில் ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-"ஆட்சி அதிகாரம் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சார்ந்தது கிடையாது. கூட்டணிக்கு தயாராக இருக்கும் கட்சிகளுக்கு உரிய மரியாதையும், பொறுப்புகளும் கொடுக்கப்பட வேண்டும் என்பது மத்தியில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. அதே போல் மாநிலத்திலும் ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும் என்று நம்புவோம்.அமைச்சர் ராஜகண்ணப்பனின் கருத்துகள் எல்லாம் தி.மு.க.வின் கருத்துகள் கிடையாது. அவரது பல கருத்துகளை அந்த கட்சியே நிராகரித்துள்ளது. எனவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதற்கு நாம் பதலளிக்க வேண்டியது இல்லை."இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.