பீகார் இடைத்தேர்தல்: 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி
பாட்னா,பீகார் மாநிலத்தில் உள்ள தராரி, இமாம்கஞ்ச், பெலாகஞ்ச் மற்றும் ராம்கர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவைக்கு தேர்வான நிலையில், இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தராரி மற்றும் பெலாகஞ்ச் தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களும், இமாம்கஞ்ச் தொகுதியில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி.) வேட்பாளரும், ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளரும் முன்னிலை வகித்தனர்.இந்நிலையில் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைகளின் முடிவில், 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளனர். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' கட்சி வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தனர். ஆர்.ஜே.டி. கட்சியால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெலாகஞ்ச் தொகுதியில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் மனோரமா தேவி 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் வேட்பாளர் முகமது அம்ஜத் 17,285 வாக்குகளை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான இடங்களில் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.