கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி,தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு 'பெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. புயலுக்கு 'பெங்கல்' என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (27-11-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.