நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு,கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். முதுகு வலியால் அவதிப்பட்டதால், அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதையடுத்து, கெங்கேரி அருகே உள்ள பிஜிஎஸ் ஆஸ்பத்திரியில் தர்ஷன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்கி ஒரு மாதம் ஆன பின்பும், இன்னும் அவர் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதற்கிடையில், தர்ஷன் நிரந்தர ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, நேற்று தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஆஜராகி, ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதற்கு தர்ஷன் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த ஜாமீன் மனு மீது விரிவான வாதம் நடைபெற வேண்டும் என்று இருதரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து, நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜாமீன் மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.