இந்தோனேசியாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலி

  தினத்தந்தி
இந்தோனேசியாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலி

ஜகார்த்தா,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மேடான் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வடக்கு சுமத்ரா பிராந்திய காவல்துறையின் போக்குவரத்து இயக்குனர் முஜி எடியன்டோ கூறுகையில், இந்தோனேசியாவின் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு இடையில் சில வாகனங்களில் மக்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற குறைந்தது 2 நாட்கள் ஆகும் என்றார். இந்த வார தொடக்கத்தில், வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் நான்கு இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை