கில் இல்லை.. உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர் அவர்தான் - மைக்கேல் வாகன் பாராட்டு
லண்டன்,இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதில் பேட்டிங்கில் ஜொலித்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அறிமுக போட்டியிலேயே அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார்.இந்நிலையில் ஜெய்ஸ்வால் தற்சமயத்தில் உலகிலேயே சிறந்த இளம் வீரராக திகழ்வதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- " ஜெய்ஸ்வால் உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர். முதல் இன்னிங்சில் சரியாக விளையாடத அவர் பின்னர் தற்காப்புடன் விளையாடி 161 ரன்கள் எடுத்தார். அதே சமயம் ஆஸ்திரேலியா அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என்பதில் நான் திகைத்துப் போனேன். இளம் வீரரான அவரை நீங்கள் பவுன்சராக வீசி தடுமாற வைக்கலாம். பீல்டர்களை நெருக்கமாக வைத்து 40 - 50 நிமிடங்கள் அட்டாக் செய்திருக்கலாம்" என்று கூறினார்.