பார்டர் - கவாஸ்கர் கோப்பை: இப்போதும் ஆஸ்திரேலியாதான் வெல்லும் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
லண்டன், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி பகல் - இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 - 1 (5) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தும் என்று ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தார்கள். அதே சமயம் இந்தியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள் கண்டிப்பாக நாங்கள் போராடி வெல்வோம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.இந்நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததும் தாம் கணித்தது போல இந்தியா வென்றதாக சவுரவ் கங்குலி தமக்கு மெசேஜ் செய்ததாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கங்குலியிடமிருந்து சிலவற்றை நான் படித்துள்ளேன். அவருடைய பணிவை நான் விரும்பினேன். அவர் மிகவும் பணிவாக இருந்தார் என்பது முக்கியம். தற்போது அவர் எனக்கு அனுப்பிய மெசேஜை படிக்கிறேன். முதல் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது சரியா? இந்தியா முதல் இன்னிங்சில் 150க்கு ஆல் அவுட்டாகி பின்னர் ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டினார்கள். ஆனால் கங்குலி அனுப்பிய இந்த மெசேஜ் சனிக்கிழமை மாலை 5 மணி 12 மணி நிமிடங்களில் வந்தது. அதில், 'ஹாய் மைக்கேல் என்னுடைய கணிப்பு நன்றாக செல்கிறது' என்று கங்குலி தெரிவித்தார். இல்லை நாங்கள் 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று தெரிவித்திருந்தோம். எனவே இந்தியாவின் அந்த ஒரு வெற்றிதான் தற்போது நடந்துள்ளது" என்று கூறினார்.