இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் விலகல்

  தினத்தந்தி
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் விலகல்

டர்பன், தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்களில் 191 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை வெறும் 42 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.இதனையடுத்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா 24 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.முன்னதாக இந்த ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீசிய பந்தில் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டரின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவர், மேற்கொண்டு 2 பந்துகளை சந்தித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் இறுதி கட்டத்தில் களமிறங்கினார். இந்நிலையில் 2-வது நாள் (நேற்று) ஆட்டம் முடிந்ததும் எக்ஸ்-ரே செய்ததில் காயம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் மேத்யு பிரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை