முழு நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடிய பெங்கல் புயல் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! - லங்காசிறி நியூஸ்
நிலவும் சீரற்ற காலநிலையினால் 24 மாவட்டங்களில் உள்ள 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட புதுப்பித்தலின் படி இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணவில்லை மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும், 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், 12,348 குடும்பங்களைச் சேர்ந்த 38,616 நபர்கள் 347 நியமிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை, ஹெடா ஓயா, தெதுரு ஓயா மற்றும் முந்தேனியாறு ஆகிய ஆறுகளுக்கு மேலும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள், மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும்.கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இன்று மாலை 4.00 மணி வரை சிவப்பு வெளியேற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 3,183 பேர் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 239 படகுகள், 111 வாகனங்கள், 40 டிராக்டர்கள் மற்றும் 64 டிரக்குகள் உள்ளன. ஆறு விமானங்கள் மற்றும் எட்டு ஆளில்லா விமானங்களும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.இன்று முதல் பலத்த மழை குறைவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.