உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவிற்காக உருவாக்கப்படும் புதிய மாவட்டம்

  தினத்தந்தி
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவிற்காக உருவாக்கப்படும் புதிய மாவட்டம்

லக்னோ,உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.'மகா கும்பமேளா 2025' தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 66 கிராமங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மாவட்டம், வரும் 2025 மார்ச் 31-ந்தேதி வரை நிர்வாக ரீதியாக செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டாக கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர மகா கும்பமேளா மாவட்டத்தில் 3 கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், 28 உட்பிரிவு மாஜிஸ்திரேட்டுகள், ஒரு தாசில்தார் மற்றும் 24 துணை தாசில்தார்கள் இருப்பார்கள் என்றும், 56 காவல் நிலையங்கள், 155 சோதனை சாவடிகள், ஒரு சைபர் பிரிவு காவல் நிலையம், ஒரு மகளிர் காவல் நிலையம் ஆகியவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளா நிறைவடைந்த பிறகு இந்த புதிய மாவட்டத்தின் நிர்வாகம் கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல் 2019 கும்பமேளா நிகழ்ச்சியின்போதும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை