மராட்டியத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை,மராட்டியத்தில் பா.ஜ.க. தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் முதல்-மந்திரி பதவியேற்க பா.ஜ.க. விரும்பியது.அதே நேரத்தில் முதல்-மந்திரி ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். ஆனால் இதனை எற்க பா.ஜ.க. மறுத்தது. அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க.வுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது.இதனிடையே புதிய அரசு பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது. இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிலையில், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார். அவருடன் சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் கவர்னரை சந்தித்தனர். நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு செய்து வைக்கிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.