காசாவில் அகதிகள் முகாம் அருகில் இஸ்ரேல் தாக்குதல்- 4 குழந்தைகள் பலி
டெய்ர் அல்-பாலா (காசா முனை):காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த ஆண்டு காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. எனினும், ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படாததால் இஸ்ரேல் தாக்குதலை தொடர்கிறது.அவ்வகையில், இன்று மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் அருகே இன்று இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள தங்குமிடங்களுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன. இதில், 4 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அப்பாவி மக்கள் என 44,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் காசா சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. ஆனால் 17 ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை போரில் கொன்றிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.