அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை
நியூயார்க்:அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி திட்டங்களை வழங்கும் முன்னணி நிறுவனம் யுனைடெட் ஹெல்த்கேர். மத்திய-மாநில அரசின் நிதியுதவி பெறும் மருத்துவ உதவித் திட்டங்களுக்கான காப்பீட்டையும் இந்நிறுவனம் நிர்வகிக்கிறது.இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் தாமஸ் (வயது 50) இன்று காலை நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், தாமசை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த தாமஸ், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர். யுனைடெட் ஹெல்த்கேர் சார்பில் வருடாந்திர முதலீட்டாளர் மாநாடு அந்த ஓட்டலில் இன்று நடைபெறுவதாக இருந்தது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தாம்சன், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.