பாகிஸ்தானில் விளையாட இந்தியாவும் விராட் கோலியும் தயார்.. ஆனால்.. - சோயப் அக்தர்
லாகூர்,9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.ஆனால் இந்தியா வந்து விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு போதுமான வருமானங்கள் கிடைக்காது. அதனால் தங்கள் நாட்டுக்கு வந்து இந்திய அணி விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. ஆனால் அதற்கு இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியா விரும்பியது போல சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய செய்திகள் காணப்படுகின்றன.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவதற்கு இந்திய அணியும் விராட் கோலியும் தயாராக இருப்பதாக முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தான் மண்ணில் வந்து இந்திய அணி விளையாடுவதற்கு பாகிஸ்தானை விட இந்தியா தயாராக இருக்கிறது. விராட் கோலியும் ஒருவேளை பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு தயாராக இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அரசு அதனை விரும்பவில்லை. நான் பிசிசிஐயுடன் சேர்ந்து இந்தியாவில் வேலை செய்துள்ளேன். ஒருவேளை பாகிஸ்தான் மண்ணில் இந்தியா காலடி வைத்தால் அவர்களுடைய தொலைக்காட்சி உரிமங்கள் மற்றும் ஸ்பான்சர்சிப் வெகுவாக உயரும்" என்று கூறினார்.