காலதாமத நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: ஜனாதிபதி பேச்சு
புதுடெல்லி,ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர், புவனேஸ்வர் நகரில் உள்ள புதிய ஜுடிசியல் கோர்ட்டு வளாகம் ஒன்றை நேற்று திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, சரியான நேரத்தில் வழங்கப்படாத நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றார்.வழக்கு ஒத்திவைக்கப்படும் கலாசாரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே. அவர்கள் கோர்ட்டுக்கு அடிக்கடி வருவதற்கு பணமோ, வாதிடும் ஆள்பலமோ இல்லாதவர்கள். பொதுமக்களின் நலனை முன்னிட்டு, வழக்கை ஒத்திவைக்கும் கலாசாரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழியை கண்டறிவதில் கோர்ட்டிலுள்ள அனைவரும் முன்னுரிமை கொடுப்பார்கள் என தன்னுடைய நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.நீதி துறையினரிடம் அச்சமின்றி குடிமக்கள் உரையாட முடியும் என உறுதி செய்யப்படுவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.