ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை 173 ரன்களில் ஆல் அவுட்
ஷார்ஜா,8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - இந்தியா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இலங்கையின் தொடக்க வீரர்களாக துல்னித் சிகேரா, புலிந்து பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.இதில் துல்னித் சிகேரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய சாருஜன் சண்முகநாதன் (42 ரன்), லக்வின் அபேசிங்க (69 ரன்) இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். இவர்கள் இருவரும் அவுட் ஆன பின்னர் இலங்கையின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.இதில் கவிஜா கமகே 10 ரன், விஹாஸ் தேவ்மிகா 14 ரன், வீரன் சாமுதிதா 8 ரன், பிரவீன் மனீஷா 5 ரன், ரஞ்சித் குமார் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.