திருவண்ணாமலை தீபத் திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று மாலை முடிவு - அமைச்சர் சேகர்பாபு
சென்னை,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகா தேரோட்டம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-இன்று மாலை அறநிலையத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் மலை உச்சிக்கு செல்ல எவ்வளவு பேரை அனுமதிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும். 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆய்வின் இறுதியை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் இன்றே அறிவிக்கப்படும். இதுவரை இல்லாத அளவு தி.மு.க. ஆட்சியில் அதிகமான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டன. ரூ.6,955 கோடி மதிப்பு கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.