திரைவிமர்சனம் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில்
சென்னை,நடிகர் சித்தார்த், ராஜசேகர் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'மிஸ் யூ'. இதில், கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியாக இருந்தநிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.பின்னர், இப்படம் வரும் 13-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புரமோஷன் பணியின்போது 'மிஸ் யூ' படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது, செய்தியாளரின் திரைவிமர்சனம் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு படம் வெளியானது என்றால் அது எல்லாருக்குமே சொந்தம்தான். நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறீர்கள். உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானலும் சொல்லலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை.இதை கோர்ட்டு சொன்னது என்று எனக்கு தெரியாது. ஆனால், நாங்கள் சொல்வது அதைதான். பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்றும் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றும் சொல்லுங்கள். அதைத்தான் சொல்லபோகிறீர்கள்' என்றார்.படம் வெளியான உடன் விமர்சனம் தெரிவிப்பதால் படத்தின் வசூல் பாதிப்பதாக கூறி படம் வெளியான 3 நாட்கள் வரை விமர்சனம் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளதாக கூறி கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.