ம.பி.: பள்ளிக்கு சரியாக வராத மாணவனை கண்டித்த முதல்வர் சுட்டு கொலை
போபால்,மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் உள்ள தமோரா அரசு உயர்நிலை பள்ளியின் முதல்வராக இருந்தவர் எஸ்.கே. சக்சேனா (வயது 55). இந்த பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்துள்ளார்.இதேபோன்று நேற்று மதியம் பள்ளிக்கு வராமல் வாசல் பகுதியில் நின்றிருக்கிறார். இதனை கவனித்த முதல்வர் சக்சேனா அந்த மாணவரை திட்டியுள்ளார். அப்போது, அந்த மாணவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முதல்வரை சுட்டுள்ளார்.இதன்பின்னர், சக்சேனாவின் ஸ்கூட்டரை எடுத்து கொண்டு தப்பி விட்டார். எனினும், தகவல் அறிந்து வந்த போலீசார் சில மணிநேர இடைவெளியில் அந்த மாணவரை கைது செய்தனர்.உத்தர பிரதேச எல்லையருகே ஸ்கூட்டருடன் நின்றிருந்த அந்த மாணவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். பள்ளி முதல்வர் எல்லோரிடமும் மதிப்பை பெற்றவராக இருந்திருக்கிறார். சரியாக செயல்படாத மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதுடன், கேட்காத மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறுவார் என ஆசிரியர் ஹரிசங்கர் ஜோஷி கூறியுள்ளார்.