அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துக்களை விடுவித்தது வருமான வரித்துறை
மும்பை,மராட்டியத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா(ஏக்னாத் ஷிண்டே), என்.சி.பி (அஜித்பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்ற நிலையில், சிவசேனா தலைவர் ஏக்னாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல் மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த நிலையில், மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு தொடர்புடைய சுமார் ரூ. 1,000 கோடி சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. இந்த சொத்துக்கள் கடந்த 2021-ம் ஆண்டு பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அஜித் பவார் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இருந்த புகார்களைப் பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தான் தள்ளுபடி செய்து இருந்தது. அதைத் தொடர்ந்தே இப்போது கைப்பற்றப்பட்ட அவரது சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் முக்கிய கட்சியாக அஜித் பவார் கட்சி உருவெடுத்து இருக்கும் சூழலில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை விடுவித்து இருப்பது அரசியல் ரீதியாக விமர்சனங்களை கிளப்பியுள்ளது.