விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

  தினத்தந்தி
விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள்  சீமான்

சென்னை,அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு... கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த சூழலில் திருமாவளவன் குறித்து விஜய் பேசியது தமிழக அரசியலில் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள். முதல்-அமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு அதை நான் பெறுவதாக இருந்தால் சரியாக இருந்திருக்கும். எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்துத் தர வேண்டியதில்லை. எல்லா நாளும் நான் பேசுவேன். அம்பேத்கரைப் பற்றி இந்த தலைமுறை பிள்ளைகள் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வாறு அவர்களிடம் சென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு வரவேற்கணும். அந்த வகையில் தம்பி விஜய் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

மூலக்கதை