அடிலெய்டு டெஸ்ட்: 181.6 கி.மீ வேகத்தில் பந்து வீசிய சிராஜ்.. உண்மை நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
அடிலெய்டு டெஸ்ட்: 181.6 கி.மீ வேகத்தில் பந்து வீசிய சிராஜ்.. உண்மை நிலவரம் என்ன..?

அடிலெய்டு, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கோப்பை டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியான பகலிரவு ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தற்போது வரை 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களுடன் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 25-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 5-வது பந்து 181.6 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டதாக காட்டப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிராஜ் கிரிக்கெட்டில் அதி வேகமாக பந்து வீசியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தின் வேகம் அவ்வாறு காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக பந்து வீசியவர்களின் சாதனை பட்டியலில் 161.3 கி.மீ. வேகத்துடன் சோயப் அக்தர் உள்ளார்.

மூலக்கதை