தற்போது அவர் என்னுடைய எதிரி அல்ல நண்பன் - இந்திய வீரர் குறித்து ஜஸ்டின் லாங்கர்
அடிலெய்டு, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வர்ணனையாளர் குழுவில் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் மற்றும் வீரருமான ஜஸ்டின் லாங்கர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது ஜஸ்டின் லாங்கர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் கடந்த இரண்டு தொடர்களில் என்னை மிகவும் பயமுறுத்தி விட்டார். தற்போது ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் எனக்கு மிகவும் பிடித்த நபராக மாறியுள்ளார் என்று நம்புகிறேன். "ஏனெனில் ஐ.பி.எல். ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. அதனால் தற்போது அவர் என்னுடைய எதிரி அல்ல நண்பன்" என்று கூறினார். இதற்கான காரணம் என்னவெனில், கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த தொடர்களில் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டார். மறுபுறம் ரிஷப் பண்ட் அந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தம்முடைய வழிகாட்டுதலில் இந்தியாவிடம் முதல் முறையாக தோற்க ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்ததாக லாங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் உள்ளார். எனவே தம்முடைய தலைமையில் தற்போது நண்பராக ரிஷப் பண்ட் லக்னோ அணியில் விளையாட உள்ளதாக லாங்கர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.