சிரியாவில் பதற்ற நிலை: பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டமாஸ்கஸ்,சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.இதில், சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறும்போது, அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என்றார்.சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.இந்த சூழலில், சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்து உள்ளது.இதேபோன்று அவசரகால உதவி எண்ணையும் அறிவித்து உள்ளது. +963993385973 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், [email protected] என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் என்றும் அதுபற்றிய செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.