விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - வி.சி.க. எம்.பி. விமர்சனம்

  தினத்தந்தி
விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது  வி.சி.க. எம்.பி. விமர்சனம்

சென்னை,விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையின் மூலம் விளக்கியிருந்தார்.இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால் திருமாவளவன் பங்கேற்வில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாளவன், "எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று கூறினார்.இந்த நிலையில் திருமாவளவன் பற்றி விஜய் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே வி.சி.க.வோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை