மதுரை-சென்னைக்கு இரவு நேர விமான சேவை: 20-ந் தேதி முதல் தொடக்கம்
மதுரை, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இரவு நேர விமான சேவையை எந்த விமான நிறுவனமும் பயன்படுத்தாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு, தனியார் விமான நிறுவனத்தின் சார்பில் இரவு நேர விமான சேவையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 20-ந்தேதி முதல் இந்த இரவு நேர விமான சேவை தொடங்குகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் தனியார் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது.அதேபோல மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதன் மூலம், சென்னை மதுரை இடையேயான 10 விமான சேவைகளில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.