ரவீந்திர ஜடேஜாவின் வீடு, கார், சொத்து மதிப்பு; விவரம் வெளியீடு
புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நேற்று, தன்னுடைய 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்களால் சர் ஜடேஜா அல்லது ஜட்டு என அன்பாக அழைக்கப்படும் அவருடைய மொத்த சொத்து மதிப்பு, வருவாய், வீடு, கார் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையால் பல சாதனைகளை படைத்து வரும் ஜடேஜாவுக்கு, ஐ.பி.எல். ஒப்பந்தங்கள், வர்த்தக பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவற்றின் வழியே வருவாய் அதிகரித்து உள்ளது.நடப்பு ஆண்டில் ஜடேஜாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக (15 மில்லியன் டாலர்) உள்ளது. 5 ஆண்டுகளில் 750 சதவீதம் அளவுக்கு அவருடைய சொத்து மதிப்பு அதிகரித்து உள்ளது என அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது. இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களில் வசதியானவர்களில் ஒருவராக உள்ளார்.2023-24 ஆண்டில் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள அவர், ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் வாங்குகிறார். தவிரவும், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சம் சம்பளம் பெறுகிறார். இதேபோன்று, ஒவ்வொரு ஒரு நாள் போட்டிக்கும் ரூ.6 லட்சம் மற்றும் ஒவ்வொரு சர்வதேச டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சம் என வருவாய் ஈட்டுகிறார்.ஐ.பி.எல். போட்டிகளில், 2008-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன்முதலாக களமிறங்கி விளையாடி வரும் அவருடைய ஐ.பி.எல். சம்பளம் பல ஆண்டுகளில் உயர்ந்தபடி வந்துள்ளது. 2022-ம் ஆண்டில் சி.எஸ்.கே. அவரை ரூ.16 கோடிக்கு தக்க வைத்தது. ஐ.பி.எல். 2025-ல் அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு உள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ஒருவர் என்ற பட்டியலிலும் இடம் பெற்றார்.ஐ.பி.எல்.லில் சேர்ந்த பின்பு, நவீன வடிவமைப்பு, ஆடம்பர வசதிகள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு போதிய இடவசதி கொண்ட ரூ.8 கோடி மதிப்பிலான அழகிய வீடு ஒன்றை ஆமதாபாத்தில் கட்டியுள்ளார். அவருடைய வெற்றிகள் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் வீடு அமைந்துள்ளது.கார்கள் மற்றும் பைக்குகள் மீதும் ஆர்வம் கொண்டவரான ஜடேஜா, ஒரு சில நட்சத்திர வீரர்களை போன்று அவற்றை வாங்கி குவிக்காமல் அளவாக வைத்திருக்கிறார். அவரிடம், கருப்பு நிற ஹுண்டாய் அஸ்சென்ட் மற்றும் வெள்ளை நிற ஆடி ஏ4 கார்கள் உள்ளன. சுசூகி ஹயபூசா பைக் ஒன்றும் ஜடேஜாவிடம் உள்ளது. ஆடம்பர வாழ்க்கை முறை, பரவலாக புகழ் பெற்றவராக அறியப்படும் ஜடேஜா, இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரி வீரராக இருந்து வருகிறார்.