திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு
திருவண்ணாமலை,திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. இதனால் அண்ணாமலையார் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் இந்த சரிவு ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டிற்காக பரணி தீபம் வரும் 13ம் தேதி அதிகாலையும், மாலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.