தமிழக அரசு கோரிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

  தினத்தந்தி
தமிழக அரசு கோரிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்  முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, மாற்று அரசியல் கருத்து கொண்ட அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-"கடந்த நவம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் கரை கடந்த 'பெஞ்சல்' புயல், பெருமழையும், சூறாவளியும் சேர்ந்து 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் மாநில அரசு போர்க்கால வேகத்தில் ஈடுபட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு, கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு சேதாரங்களை மதிப்பீடு செய்துள்ளது. இந்த உயர்மட்டக் குழு, தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தபோது, பெஞ்சல் புயல் பாதிப்புகள், ஏற்பட்டுள்ள சேதாரங்கள், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான செலவு மதிப்பீடுகள் என எல்லா விபரங்களும் உள்ளடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை முதல்-அமைச்சர், உயர் மட்டக் குழுவிடம் வழங்கியுள்ளார். முன்னதாக டிசம்பர் 2-ந்தேதியில் பிரதமருக்கு கடிதம் எழுதி ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்கி தர வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்த சூழலில் மத்திய அரசு, தமிழ்நாட்டின் புயல் நிவாரணப் பணிக்கு ரூ.945 கோடி நிதி வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, வழங்கப்பட்ட நிதி அல்ல என்பதே உண்மையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயல், பெருமழை தலைநகர் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் புரட்டி போட்டது. அப்போது தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தயாரித்து ரூ.37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது. மாநில அரசின் கோரிக்கைகள் அனைத்தும் "கேளாக் காதில், ஊதப்பட்ட சங்காக" முடிந்து போனது. இப்போதும் மாநில அதிகாரிகள் புயல், மழை பாதிப்புகளை மதிப்பிட்டு தயாரித்துள்ள அறிக்கையில் உள்ள விபரங்களை ஏற்காமல், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை பிரிவு, சேதாரங்களையும், பாதிப்புகளையும் குறைத்து மதிப்பீடு செய்து, சுமையை முழுவதும் மாநில அரசின் தலையில் சுமத்த முயற்சிக்கிறது. மாற்று அரசியல் கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த பாரபட்ச அணுகுமுறையை ஏற்க முடியாது.தற்போது மத்திய அரசு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்டு தோறும் வழங்கப்படும் பேரிடர் கால நிதி ரூ.945 கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது கைக்கு வந்து சேர எத்தனை மாதங்கள் ஆகுமோ? நிதிக் குழு பரிந்துரை செய்துள்ள பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெறும் 3.51 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இயற்கை பேரிடர் கால நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு கோரும் நிதி அளவில் மூன்றில் ஒரு பங்கு தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று பதினாறாவது நிதிக் குழுவில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோரியுள்ள, பேரிடர் கால நிவாரண நிதி ரூ.2,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை