எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

  தினத்தந்தி
எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது  திருமாவளவன்

சென்னை,சென்னையில் நேற்று நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது நான் இப்போது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்றைக்கு நம்மளோட தான் இருக்கிறது" என்று கூறி இருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு பதிலடியாக திருமாவளவன் கூறுகையில், "தி.மு.க. அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் சென்னையில் உள்ள வி.சி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். மேலும் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே, விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை.. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என்றெல்லாம் நினைப்பதில்லை.கூட்டணி நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெளிவாக உள்ளது. கூட்டணி விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பின்பற்றுமாறு சிலர் அறிவுரை கூறுகின்றனர். எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்றாமல் தடுப்பதில் வி.சி.க.வின் பங்களிப்பு முக்கியமானது. கூட்டணி, தேர்தல் எல்லாம் வி.சி.க.வின் முக்கியமான நோக்கம் இல்லைதிருமாவளவன் தடுமாறுகிறார், பின்வாங்குகிறார் என சிலர் கூறுகின்றனர் வி.சி.க.வின் சுயமரியாதையை, தன்மானத்தை, கருத்தியலை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது" என்று திருமாவளவன் கூறினார்.

மூலக்கதை