நள்ளிரவு வரை இலங்கையை சுற்றி வரும் ஆபத்து - வெளியான அவசர எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே இன்றைய(07-12-2024) காலை காற்று சுழற்சி உருவாகியுள்ளது.காற்று சுழற்சி நாளை இரவு அல்லது நாளை 08 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் இந்த தாழமுக்கம் வலுவடைவதற்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுகின்றது. இன்று வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை உருவாகும் காற்று சுழற்சி எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இருந்து சற்று தொலைவாகவே கடற்பகுதியின் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் நகர்வு திசை மற்றும் வேகம் அதற்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தியைப் பொறுத்து மாற்றமடையலாம் என்றும் கூறப்படுகிறது.ஆனால் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு முதல் 15 ஆம் திகதி வரை மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் மிகக் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.