கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
பெங்களூரு,இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார். உத்தப்பா இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார், மேலும் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புலகேசிநகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.முன்னதாக செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பள பணத்தில் பி.எப். பிடித்தம் செய்துவிட்டு, பின்னர் அதை அவரது கணக்கில் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம் என்று கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 4-ம் தேதியிட்ட கடிதத்தில், கைது வாரண்டை நிறைவேற்றுமாறு சடாக்சரி கோபால் ரெட்டி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், உத்தப்பா தனது குடியிருப்பை மாற்றியதைத் தொடர்ந்து, பி.எப். அலுவலகத்திற்கு வாரண்ட் திருப்பி அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.