காங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் பலி
கின்ஷாசா,மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் 'புரிசா' என்ற ஆறு பாய்கிறது. இங்கு மற்ற நகரங்களுக்கு செல்வதற்கு மக்கள் இந்த ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து அண்டை நகருக்கு புரிசா ஆற்றில் நேற்று (21.12.2024) இரவு படகு ஒன்று புறப்பட்டு சென்றது இதில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் அதனை கொண்டாடுவதற்காக அந்த படகில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். படகு வழக்கம்போல் ஆற்றில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.