ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு

  தினத்தந்தி
ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும்  திருமாவளவன் அறிவிப்பு

திருச்சி, புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெல்லி வந்திருந்தபோது மத்திய மந்திரியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற பல உறுப்பினர்கள் உடனிருந்தோம். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நாங்கள் ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்க வேண்டுமானால் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினார்கள். எங்கள் அதிகாரிகளோடு நாங்கள் இன்னும் பேச வேண்டியிருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்திய பின்பு எங்களுடைய கருத்தை சொல்கிறோம் என்று சொன்னபோது, அதை ஒரு ஒப்பந்தம் போல கையெழுத்திடுங்கள் என்று வலியுறுத்தினார்கள். தேசிய கல்விக் கொள்கையில் நீங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைப் படியுங்கள். ஆனால், இந்தியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். உங்கள் தாய்மொழியையும், ஆங்கிலத்தையும் நீங்கள் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியையும் நீங்கள் படித்தாக வேண்டும். இதுதான் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கருத்து. அதைத்தான் அவர் வலியுறுத்தினார். அது ஒரு நிர்ப்பந்தம் தான். அப்படி செய்தால் தான் நிதியை ஒதுக்குவோம் என்று கூறியது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நாடாளுமன்றத்தில் இதனை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தோம். அம்பேத்கர் பேச்சு குறித்து அமித்ஷா உடனடியாக விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் திரித்துப் பேசுவதாக விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் காங்கிரசை விமர்சித்தார் என்றாலும் கூட புரட்சியாளர் அம்பேத்கரை கடவுளோடு ஒப்பிட்டுப் பேசியதில், அம்பேத்கர் மீதான வெறுப்பு அல்ல.. அவரது குறைவான மதிப்பீடு வெளிப்பட்டிருக்கிறது.இந்தியா முழுவதும் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி உள்பட அமித்ஷா பேசியது தவறில்லை என்று நியாயப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். எக்ஸ் தளத்தில் அந்தப் பதிவுகளை முற்றாக நீக்க வேண்டும் என்று அரசின் சார்பிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது என்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் சொல்கின்றனர். ஆனால், உண்மையில் அம்பேத்கரே அதுகுறித்து பேசிய குறிப்புகள் உள்ளன. வீர சாவக்கர் அம்பேத்கருக்கு எதிராக பிரசாரம் செய்து தோற்கடித்தார் என்று அம்பேத்கரே கூறியிருக்கிறார். பா.ஜ.க. சேர்ந்தவரை தான் உண்மையைத் திரித்து பொய்யை பரப்புகின்றனர். தேர்தல் நேரத்தில் யார் எவ்வளவு பெரிய ஆளுமைகள் நின்றாலும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். அவர்கள் வெற்றி பெறட்டும் என்றும் யாரும் நினைப்பதில்லை. ஆனால், அவர்கள் கருத்தியல் ரீதியாக முரண்படுகின்றனர். அம்பேத்கருடைய சிந்தனைகளை மறுத்து அவரை இந்துத்துவ அம்பேத்கர் என்று அடையாளப்படுத்தி அவரை விழுங்கி செரிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஏற்க முடியாது என்பது அனைவருடைய எதிர்ப்பாகவும் உள்ளது.வரும் 28-ம் தேதி இந்தியா முழுவதும் இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தோர் ஒரே நேரத்தில் ஆங்காங்கே மாநில வாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். அம்பேத்கர் விளிம்பு நிலை மக்களின் மீட்பர். அவர் என்ன கடவுளா..? என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய அமித்ஷாவின் போக்கு கண்டனத்துக்குரியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி.எதிர்க்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை. வேல்முருகன் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதைக் கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.பத்திரப்பதிவுத் துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் திமுக கூட்டணி உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முழுமையாக போதைப் பொருளை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு" என்று திருமாவளவன் கூறினார்.

மூலக்கதை