இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா..? பயிற்சியாளர் தகவல்

  தினத்தந்தி
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா..? பயிற்சியாளர் தகவல்

மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் இந்திய அணிக்கு தலைவலியாக உள்ளது. அவர் 3 போட்டிகளின் முடிவில் 2 சதங்கள் உட்பட 409 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர். இதனிடையே கடந்த போட்டியின்போது டிராவிஸ் ஹெட் காயமடைந்தார். இதனால் இந்தியாவின் 2-வது இன்னிங்சின்போது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் இவர் பாக்சிங் டே போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் 4-வது போட்டிக்கான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் டிராவிஸ் ஹெட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தற்போது அவர் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். இன்று பயிற்சி மேற்கொண்டார். இதனால் அவர் 4-வது போட்டிக்கு தயாராக இருப்பதாகவே நான் உணர்கிறேன். இருப்பினும் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்று கூறினார்.இதன் மூலம் டிராவிஸ் ஹெட் 4-வது போட்டியில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மூலக்கதை