'திராவிட இயக்கங்கள் பலவீனமாகக் கூடாது என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்..?' - திருமாவளவன் பேச்சு
சென்னை,சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-"அரசியல் களத்தில் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இருந்தும், அந்த வாய்ப்புகள் தேவையில்லை என்று நாங்கள் முடிவு செய்கிறோம் என்றால், அந்த முடிவு எவ்வளவு துணிச்சலான முடிவு, கொள்கை சார்ந்த முடிவு என்பதை பற்றி பேச இங்கு பலர் தயாராக இல்லை. தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறது, அதற்கு திருமாவளவன் பணிந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின்போது, எண்ணிக்கை எங்களுக்கு பெரிதல்ல, சனாதன சக்திகள் இந்த மண்ணில் வலுப்பெறக் கூடாது என்பதற்காக இந்த கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம் என்று நான் சொன்னேன். அந்த முடிவு குறித்து யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை. பெருமைக்குரிய தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று சனாதன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களை வலுப்பெற விடாமல் தடுப்பதற்காகத்தான் வி.சி.க. பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதுதான் ஒரே காரணம். மற்ற இழப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. திராவிட இயக்கங்களை பலவீனப்படுத்திவிட்டு சனாதன சக்திகள் இங்கு வேறூன்றினால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத்தான் தொலைநோக்கு பார்வையோடு நாம் மதிப்பீடு செய்கிறோம். திராவிட கட்சிகளோடு எங்களுக்கு முரண்பாடுகள் உண்டு, மாறுபட்ட கருத்துகளும், விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனாலும் திராவிட இயக்கங்கள் பலவீனமாகக் கூடாது என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்? பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியே வர வேண்டும் என்று எதற்காக சொல்கிறோம்? அ.தி.மு.க. பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பா.ஜ.க. வந்து அமர்ந்துவிடும் என்பதுதான் நம் கவலை. அதுதான் வி.சி.க.வின் பார்வை, அதுதான் திருமாவளவனின் பார்வை. தி.மு.க. என்ற அரசியல் கட்சியை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் தி.மு.க.வை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த திராவிட அரசியலையே விமர்சிப்பது மிகவும் ஆபத்தானது. ஒட்டுமொத்தமாக திராவிட அரசியலையே பிழை என்று பேசுவது சனாதன சக்திகளுக்கு துணை போவதைப் போன்றது. அதை கண்டிக்காமல் இருக்க முடியாது. திராவிட அரசியல் என்பது தி.மு.க.வுடன் மட்டும் சுருங்கிவிடக்கூடிய அரசியல் அல்ல. திராவிட அரசியல் என்பது நெடிய பாரம்பரியம் உள்ள ஆரிய, பார்ப்பனிய, சனாதன எதிர்ப்பு அரசியல். எனவேதான், எத்தனை இழப்புகளும், விமர்சனங்களும் வந்தாலும் வி.சி.க. சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். அந்த துணிச்சலை பாராட்டுவதற்கு பதிலாக விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்."இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.