விஜய் ஹசாரே கோப்பை: ஷாரூக் கான் அதிரடி சதம்..உத்தர பிரதேசத்தை வீழ்த்திய தமிழகம்
விசாகப்பட்டினம்,32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழ்நாடு, பெங்கால் உள்பட பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய இரு அணிகள் பிளே-ஆப் சுற்று மூலம் தேர்வாகும். இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் உத்தர பிரதேசம் - தமிழகம் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 47 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 284 ரன்கள் எடுத்தது. தமிழகம் தரப்பில் அதிரடியாக ஆடிய ஷாரூக் கான் சதம் (132 ரன்) அடித்து அசத்தினார். தொடர்ந்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உத்தரபிரதேசம் 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் தமிழகம் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உத்தரபிரதேசம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரிங்கு சிங் 55 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை ஜம்மூ-காஷ்மீரை எதிர்கொள்கிறது.