பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் - பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் பலி

  தினத்தந்தி
பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்  பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் பலி

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்டுங்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களை குறிவைத்து தற்கொலைப் படை மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள 3 இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி பன்னு மாவட்டத்தில் உள்ள ஜானி கேல் என்ற பகுதியில் 2 பேர், வடக்கு வாரிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் மற்றும் தெற்கு வாரிஸ்தானில் 8 பேர் என மொத்தம் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதே சமயம், இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை