விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை,நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சென்று அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர்.அமைதிப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், காவல்துறை மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி தேமுதிக அலுவலகத்தை வந்தடைந்ததும், விஜயகாந்த் நினைவிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.