சாம்பியன்ஸ் டிராபி தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது  சரித் அசலங்கா

கொழும்பு,ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னாள் உலக சாம்பியனான இலங்கை தகுதி பெறவில்லை. இந்நிலையில், ஐ.சி.சி சம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,உண்மையைச் சொல்வதென்றால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தைப் பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை. கடந்த காலத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும். இப்போது நாங்கள் ஒரு அணியாக வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஒரே வழியில் சென்று கொண்டிருக்கிறோம். இது ஒரு நல்ல வழி என்று நான் நினைக்கிறேன்.இப்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தத் தொடரை வெல்வதே எங்களது இலக்கு. நியூசிலாந்து ஒரு கடினமான மற்றும் நல்ல அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். கேப்டனாக நான் வீரர்களிடமிருந்து 100 சதவீதத்தைப் பெற விரும்புகிறேன். அவர்கள் எந்த அழுத்தமும் இன்றி எந்த விதமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். இது எனது பங்கு என்று நான் நினைக்கிறேன். மற்ற விஷயம் என்னவென்றால், நான் ஒரு பேட்ஸ்மேனாக முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புகிறேன் மற்றும் ரன்களை அடிக்க விரும்புகிறேன். மேலும் எங்கள் அணியில் சிறப்பான வீரர்கள் பலரும் உள்ளதால் நிச்சயம் இத்தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை