பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வார்த்தை மோதல்: ராமதாசை இன்று சந்திக்கிறார் அன்புமணி

  தினத்தந்தி
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வார்த்தை மோதல்: ராமதாசை இன்று சந்திக்கிறார் அன்புமணி

சென்னை,விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார். இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் கூறும்போது, "கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது. அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம்" என்றார். உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்" என்று அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறி விட்டு மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ராமதாசும் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.பா.ம.க.வின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தசூழலில் ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர்அருள்மொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிகிறது. இதனிடையே இருவரில் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை