சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷியாவில் ரெயில் சேவைகள் துண்டிப்பு

  தினத்தந்தி
சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷியாவில் ரெயில் சேவைகள் துண்டிப்பு

மாஸ்கோ,உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மற்றும் ரஷிய படைகளிடையே மீண்டும் பயங்கர மோதல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதோடு உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரஷியாவின் பெல்கோரோட், ரோஸ்டோவ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. அவற்றில் 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷிய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த தாக்குதலில் வோரோனேஜ் ரெயில் நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் சேதமடைந்தன. இதனை சரிசெய்யும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் நாட்டின் தகவல்படி, மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் ஒரு சரக்கு ரெயில் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷிய ராணுவத்திற்கு "தளவாடங்களை வழங்க" பயன்படுத்தப்பட்ட வண்டிகளை அழித்ததாகவும், வோஸ்கிரெசென்ஸ்கில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்தில் இரவு நேர குண்டுவெடிப்பின் வீடியோவை வெளியிட்டதாகவும் உக்ரைனின் உளவுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை