பரபரப்பான சூழலில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்

  தினத்தந்தி
பரபரப்பான சூழலில் தென் ஆப்பிரிக்கா  பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்

செஞ்சூரியன்,பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 211 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 16 ரன்களுடனும், சாத் ஷகீல் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 59.4 ஓவர்களில் 237 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், சாத் ஷகீல் 84 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டோனி டி ஜோர்ஜி (2 ரன்), ரிக்கெல்டன் (0), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (0) வரிசையாக ஆட்டமிழந்தனர். 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 27 ரன்கள் அடித்துள்ளது. மார்க்ரம் 22 ரன்களுடனும், கேப்டன் பவுமா ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 121 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட் உள்ளது. இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மூலக்கதை