பேச்சை நிறுத்திய ஆத்திரத்தில்... காதலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பெண்
நாக்பூர்,மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உப்பல்வாடி பகுதியில் எஸ்.ஆர்.கே. காலனியில் காதலர் ஒருவர் பெண்ணிடம் சில நாட்களாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால், என்ன விவரம்? என கேட்பதற்காக தன்னுடைய சகோதரர், மற்றொரு ஆண் நண்பரை அழைத்து கொண்டு அந்த பெண் காதலரை சந்திக்க சென்றார்.காதலரிடம், ஏன் பேசாமல் தவிர்த்து வருகிறீர் என கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில், பெண்ணுடன் வந்த சகோதரர் கத்தியால் அந்நபரை குத்தியுள்ளார். அவருடன் அந்த பெண்ணும் சேர்ந்து கொண்டார்.இதில், அந்த காதலர் பலத்த காயமடைந்து உள்ளார். அப்படியே கீழே சாய்ந்து விட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி விட்டனர். கீழே கிடந்த காதலரை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து, மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி கபில் நகர் காவல் நிலைய அதிகாரிகள் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.