தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

  தினத்தந்தி
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு அனுமதியின்றி விநியோகம் செய்ததாக த.வெ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். இதன்படி அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தி.நகர் போலீசார் தங்க வைத்துள்ளனர். முன்னதாக சென்னை பூக்கடையில் தனியார் மகளிர் கல்லூரியில் விஜய் எழுதிய கடிதம் மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடிதம் விநியோகம் செய்யக்கூடாது என போலீசார் கூறியும், அதனை மீறியதால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சூழலில் பொதுச் செயலாளர் ஆனந்த் கைதை கண்டித்து மண்டபத்திற்குள் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று கோரிக்கை மனுவை அளித்தார். விஜய்-உடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், வெங்கட்ராமன் ஆகியோரும் சென்றிருந்தனர். விஜய் கவர்னரிடம் அளித்த அந்த மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை