திருச்சியில் ஜன.10ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜன.10ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை 31.12.2024 முதல் 9.01.2025ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025ஆம் தேதி முதல் 20.01.2025ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் அந்த இடங்களில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் .